Headlines News :
அன்புள்ள சகோதர்களே!இவ் இணையத்தளத்தை நீங்கள் பார்ப்பதோடு ஏனயோர்களுக்கும் எத்திவைக்கவும்.அதே போன்று உங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் mnajeeblk@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ”உங்களது மின்னஞ்சல் முகவரியில் இத்தளத்தின் கட்டுரைகளை பெற்றுக் கொள்ள மின்னஞ்சல் மூலம் சந்தாதாராகுக.
Home » » இஸ்லாம் உலக மதமா?

இஸ்லாம் உலக மதமா?

Written By islamipc on Saturday, February 2, 2013 | 5:12 PM


முஹம்மது இத்ரீஸ்

மனித இனத்தின் படிமலர்ச்சியில் சிந்தனைகளின் வரலாறும் நீண்டதும் பல்வகையான போக்குகளுடையதும் பல்வேறு மொழிகள், சமூகங்களுக்கு மத்தியில் நின்று நிலவி நீட்சியாகி இன்றுவரை தொடர்ந்து செல்வதை அவதானிக்க முடியும். அந்த வகையில் மதங்களும் மதங்களைத் தோற்றுவித்தவர்களையும் ஒரு வரிசையில் வைக்க முடியும். பிளேட்டோ தொடங்கி நோம்சோம்ஸ்கி வரை இன்னொரு வரிசையில் வேறுபலரை வைக்க முடியும்.

இவ்வாறு விஞ்ஞானிகளின் பட்டியலும் இருக்கிறது. மத ஸ்தாபகர்கள் ஒரே நேரத்தில் இறைவெளிப்பாடு என்ற அம்சத்தோடும் மானுடத்தன்மை என்ற பகுத்தறிவு அம்சத்தோடும் தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். இரண்டாவது வகையினர் பெரும்பாலும் தனிச்சிந்தனையாளர்களாகவே காணப்படுவர்.

இவர்கள் பெரியளவில் தமக்குப் பின்னால் ஒரு வாழ்வியலையோ சமூக அமைப்புக்களையோ வழிவழியாக உருவாக்கியவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் மத ஸ்தாபகர்கள் தமது சமகாலத்திலும் அதற்குப் பின்னாலும் வழிவழியாகப் பின்பற்றக்கூடிய ஒரு மக்கள் திரளையும் கொண்டிருப்பர். அதற்குள் புத்துயிர்ப்புவாதிகளும் மறுமலர்ச்சியாளர்களும் தோற்றம் பெற்று மறுவியாக்கியானங்களைச் செய்து கொண்டு செல்வர்.

இன்னொரு வகையாகவும் இந்த மதங்களை நாம் அனுக முடியும். அதாவது பரப்பப்படும் மதங்கள், பரப்பப்படாத மதங்கள். பரப்பப்படும் மதங்கள் பட்டியலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உலகில் முன்னணியில் இருக்கின்றன. உலக வரலாற்றை கூர்ந்து கவனித்தால் நபிகளின் வருகைக்குப் பின்னர்தான் கிறிஸ்தவம் பரப்பப்படும் மதமாக மாறுகிறது. அதற்கு முன்னர் பாரியளவில் பரப்புப் பணி நடைபெறவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதாக நம்பப்படும் அல்குர்ஆனில் இஸ்லாம் ஒரு உலகலாவிய தூது என்ற கருத்தாக்கத்துக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதை இரண்டு வகையாக விளக்கியுள்ளதையும் அவதானிக்கலாம். ஒன்று காலம், மற்றது இடம். காலம் என்று கூறும் போது இஸ்லாம், கிறிஸ்த்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற மதம் அல்ல. அதற்கும் முன்னரும் பல இஸ்லாம்கள் இருந்தன. இஸ்லாம், முஸ்லிம் என்ற சொற்பிரயோகம் அதற்கு முன்னர் தோன்றிய சமூகங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அல்குர்ஆன் நபிகளுக்குக் கூறியுள்ளது.

ஆப்ரஹாம், நோவா, யாகோப் போன்ற முன்னைய தீர்க்கதரிசிகள் பற்றிய குறிப்புக்களின் வசனங்களிலும் அவர்களைக் குறிக்கவும் அவர்களைப் பின்பற்றிய தோழர்களைக் குறிக்கவும் இஸ்லாம் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் எல்லாக் காலத்திலும் இருந்துள்ள ஒரு மதம்தான் என்ற கருத்து இதனால் பெறப்படுகிறது. நபிகளும் "பூர்த்தி செய்யப்படாத ஒரு கட்டிடத்தை நான் பூர்த்தி செய்ய வந்தவன்" என்று கூறுகிறார். முன்னைய தூதுகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவுமே நபிகள் தன்னைப் பார்க்கிறார்.

இஸ்லாம் எல்லா இடத்துக்கும் உரிய தூது என்பது மற்றொரு பார்வையாகும். அது அரேபியாவில் நபிகள் யுகத்தில் இறுதியாக முழுமையடைந்தாலும் அது அறேபியருக்கோ அந்தப் பூகோள பரப்பெல்லையில் வாழ்பவர்களுக்கு மட்டுமோ சொந்தமான கொள்கை அல்ல. அது அகிலம் முழுக்க வாழக்கூடிய மனித சமூகங்களுக்குச் சொந்தமான கொள்கை. இந்தக் கருத்தைக் காட்டக் கூடிய வகையிலும் அல்குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக "இந்தக் குர்ஆன் உலகத்தாருக்கான நினைவூட்டல் ஆகும்." (இன்ஹுவ இல்லா திக்ருன் லில் ஆலமீன்), "நபியே! உம்மை அகில உலக மக்களுக்கும் அருளாக அனுப்பியுள்ளோம்" என்று கூறும் பிரயோகம் இந்தச் சிந்தனைக்கு வழிவகுக்கின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் அதிகாரத்தையோ மதீனா வாசிகளுடனும் மற்றும் பல்வேறு இனக் குழுக்களுடனும் செய்து கொண்ட மதீனா சாசனத்தின் ஊடாக ஒரு அதிகார நிலையை அடைவதற்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வசனங்கே இவை. எனவே இஸ்லாம் மக்கா, மதீனாவுக்கு மட்டுமுரிய தூது அல்ல. அது உலகத்தாருக்கான தூதாகும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கினாப் படுத்துகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யுகத்தில் இந்தப் பின்புலத்திலிருந்து அக்காலத்தில் அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இருந்த பல நாடுகளுக்கும் மன்னர்களுக்கும் தன்னுடைய தூதை வெளிப்படுத்தி அழைப்புவிடுத்த சம்பவங்களும் உள்ளன. தபறி என்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் ரோம, பாரசீக, எகிப்து போன்ற மன்னர்களுக்கு அனுப்பிய எட்டு கடிதங்களைத் தொகுத்துள்ளார். இவை தனக்குக் கிடைத்தவை என்றும் இவையல்லாத வேறு பல கடிதங்களும் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய நீதி, நிருவாக, நட்பு, வருமான மறுபங்கீட்டுக் கணிப்பீடுகள், பிரச்சாரக் கடிதங்கள் அடங்கிய 600 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பை கலாநிதி ஹமீதுல்லா தொகுத்துள்ளார். இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதங்களை எடுத்துக் கொண்டு அவரது தோழர்கள் சிலர் வந்துள்ளனர். இந்தியாவுக்கு வந்த தமீமுல் அன்சாரியின் சமாதி தென்னகத்தில் இருக்கிறது.

கி.பி. 628– 632 ஆகிய நான்கு வருட காலப்பிரிவில் இலங்கையில் இரண்டு வருடங்களும் மீதி இரண்டு வருடங்களை சீனாவிலும் இஸ்லாமிய பரப்புப் பணியிலீடுபட்ட வஹாப் இப்னு அபீ ஹப்ஸா என்ற நபித்தோழரின் சமாதி சீனாவிலிருக்கிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ் யாத்திரையின் போது மக்காவில் அறபா மைதானத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டதாக நபிமொழித் தொகுப்புகள் கூறுகின்றன. இந்த ஒரு இலட்சம் பேரும் சஊதி அறேபியாவுக்குள் மரணிக்கவில்லை. மேற்கே, ஸ்பெயின், மொரோக்கோ, டியூனிஸா, எகிப்து என மத்தியாசியா, கிழக்காசியா போன்ற பகுதிகளிலும் நபித்தோழர்களின் அடக்கஸ்தளங்கள் காணப்படுவது எதைப்பறைசாற்றுகிறது? ஏன் அவர்கள் அறபுத் தீபகற்பத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும்? றுபுஆ பின் ஆமிர் என்ற நபித்தோழர் றுஸ்த்தும் மன்னனிடம் சென்று "மனிதர்கள் மனிதர்களையும் மதங்கள் மதங்களையும் அடிமைப்படுத்துவதிலிருந்து மனித சமூகத்தை விடுதலை செய்வதே எமது தூதின் நோக்கம் என்று கூறுகிறார்கள்."

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யுகத்திலும் பாரசீகத்தைச் சேர்ந்த சல்மானுல் பாரீஸி, எதியோப்பியாவைச் சேர்ந்த பிலால், ரோமைச் சேர்ந்த சுஹைப் ரூமி போன்ற பல இன, மொழி அடையாளங்களைக் கொண்டவர்கள் நபிகளின் தூதை தமது தூதாக எண்ணி ஏற்றுக்கொண்டதை வைத்துத்தான் நானும் இஸ்லாம் ஓர் உலகலாவிய தூதாக, மதமாக இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

இன்றும்கூட இஸ்லாத்தை ஒருபுறம் தமது பண்பாடாக ஆக்கிக் கொண்டு பின்பற்றுகிறவர்கள் இருப்பதைப் போல அதற்கு வெளியில் அவர்களையும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாத்தையும் நேசிக்கின்ற அபிமானிகளும் இருக்கின்றார்கள். இந்த அபிமானிகளுக்கும் கூட (உள்ளங்களால் இஸ்லாத்தோடு இணைந்தவர்கள், உடலால் இஸ்லாமிய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பவர்கள் அல்ல) இஸ்லாமிய வாழ்வாதாரத் திட்டத்தில் ஒரு அலகாகக் கருதப்படும் ஸகாத் பெறும் கூட்டத்தாரில் அடக்கப்படுகின்றனர்.

நவீன காலத்தில் இடதுசாரி அணியைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தின் இறையியல் அம்சத்தைவிட இஸ்லாத்தின் மானுட அம்சத்தை நீதிக்காகக் குரல்கொடுக்கின்ற அதன் தன்மையில் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். நபிகளின் மானுடத் தன்மையில் தன்னை நம்பி ஏற்றுக் கொண்டு வந்தவர்களை கடைசிவரை கைவிடாமல் காப்பாற்றி அவர்களுக்கான ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த வரலாற்று அம்சம் பல முக்கியமான மாக்ஸியவாதிகளை ஈர்த்திருக்கின்றது. இன்னும் சிலர் இஸ்லாத்தில் தமக்குப் பிடித்த அம்சங்களான நோன்பு, விருத்த சேதனம் போன்ற விடயங்களை கடைப்பிடிப்பவர்களும் காணப்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் எந்த ஆய்வு நோக்கிற்கும் இடம்தராத இறுகிய, நெகிழ்வுத் தன்மையே அற்ற ஒன்றாக இஸ்லாத்தைப் பார்க்கவில்லை. இஸ்லாம் மதத்திற்குரிய சில பண்புகளைப் பெற்றிருந்தாலும் அதை ஒரு வாழ்வியலாக, விஞ்ஞானபூர்மான ஆய்வுப் பொருளாகப் பார்க்கின்றேன். 'மனிதனுக்காகத்தான் மதமோ, சட்டமோ தவிர, மதத்துக்காவும் சட்டத்திற்காகவும் மனிதனல்ல' என்ற கருத்தை இஸ்லாமிய சட்ட சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய சட்ட அறிஞர் முஸ்தபா அஹ்மத் ஷர்கா அவர்கள் "இஸ்லாமிய சட்டங்கள் இருப்பதும் இல்லாமல் போவதும் அதனுடைய காரணத்தைக் (இல்லத்) கொண்டே" என்று கூறுகிறார். அதாவது காரணம் இருக்கும் வரைக்கும் சட்டம் இருக்கும். காரணம் போய்விட்டால் சட்டமும் இல்லாமல் போய்விடும் என்று கூறுவது அவர் இஸ்லாமிய சட்டங்களை ஆழ்ந்து புரிந்து கொண்டதன் சாராம்சப்படுத்தலாகும். மனித சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதும் அநீதியை அழிப்பதும்தான் எந்தவொரு நல்ல கொள்கைக்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய பண்பாகும்.

இஸ்லாம் அதன் பொற்காலத்தில் எளிமையாகவே விளங்கிக் கொள்ளப்பட்டது. நடைமுறைப்படுத்தப்பட்டது. அது காலம் செல்லச் செல்ல படிப்படியாக நிறுவன மயப்பட்டு இன்றிருக்கின்ற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. இன்று நவீனத்துவ நோக்குக் கொண்ட கட்டிறுக்கமான இஸ்லாமிய வாதம் மையத்தில் இருப்பதால் அதை எதிர்ப்பதற்கான விளிம்பு நிலை இஸ்லாமிய கருத்தியலையும் நபிகளிலிருந்தும் அவர் தம் போதனைகளிலிருந்தும் மறுவாசிப்புச் செய்து உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கான சாத்தியங்கள் இருப்பதுதான் இஸ்லாத்தினுடைய சிறப்பாகும்.

இஸ்லாத்தைக் காலத்துக் காலம் புத்துயிர்ப்புச் செய்வதற்கான நியாயவியல் சிந்தனை முறைமை வளர்து கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தில் ஒரு பல்பரிமாணத் தன்மை, பல்வகைமைகளையும் அங்கீகரிக்கின்ற தன்மை காணப்படுகிறது. நீங்கள் சொல்வது போல இஸ்லாம் உலக மதம் என்ற கட்டமைப்பின் மூலம் எதேச்சாதிகாரப் போக்கு உருவாகலாம் என்ற அச்சம் எனக்கும் இருக்கிறது. இன்றிருக்கின்ற சஊதி ஆரேபிய பழங்குடி தன்மை வாய்ந்த மன்னர்களிடம் ஜனநாயக விழுமியங்களை இயன்றவரை பேணுகின்ற நம்கால உலக சமூகங்களை இஸ்லாமிய அரசியல் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அடகுவைக்கின்ற நிலையிலிருந்து நாம் கதைக்கவில்லை. அவர்கள் அதற்கு லாயக்குமில்லை. ஒரு பூதத்திடம் பல்மொழி பேசும் பல்பண்பாடுகளையும் வாழ்வியல்களையும் கொண்ட உலக சமூகங்களை மத்திய கிழக்கு முடிமன்னர்களிடம் சரணாகதியடைய வைப்பது தற்கொலைக்குச் சமனாகும். அவர்கள் இஸ்லாத்தின் உன்னதமான போதனைகளை கடைப்பிடித்தொழுகுவதற்கே இன்னும் பல நூற்றாண்டுகள் தேவை.

ஆனால் இன்றும் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான, அதிகாரத்திடம் உண்மையை உரைப்பதற்கான துணிச்சலையும் வீரியத்தையும் கொடுக்கக் கூடிய வகையில் இஸ்லாமிய பிரதிகள் அமைந்துள்ளன. மேற்குலகில் ஒரு உத்தியோகபூர்வ பிரதி இல்லை. ஆனாலும் அவர்கள் அவர்கள் பல நல்ல சிந்தனைகளை தோற்றுவித்துள்ளனர். பிரச்சினை என்னவென்றால் சாதாரண குடிமகனிலிருந்து அனைவரும் தனது வாழ்வியலை அமைத்துக் கொள்வதற்கான சிந்தனையை எங்கிருந்து முழுமையாகப் பெற்றுக் கொள்வது என்ற சிக்கல் இருக்கிறது. இருக்கின்ற பிரதியையும் தூக்கியெறிந்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் முடிவதில்லை.

தனிமனிதனுக்கான எல்லா வகையான போஷிப்புக்களையும் வழங்கக்கூடிய நிலையில் எமது நவீனகால, பின்காலனிய சமூகங்களில் சமூக ஏற்பாடுகளில் இதுவரை இல்லை. எனவே இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சமயங்களிலுள்ள பிரதிகள் மீதான வாசிப்புக்களும் பின்பற்றல்களும் மறுவாசிப்புக்களும் நடந்தவண்ணமுள்ளன. பிரதிகளுக்குள் இருந்து கொண்டு சமகால சவால்களுக்கு ஏற்ப அவற்றை மறுவாசிப்புக்குட்படுத்துவது இன்றைய தேவையாக உள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்த உலக சமூகங்கள், பண்பாடுகள் அனைத்தையும் ஒன்றாக்க முடியும் என்று கனவு இருந்தாலும் அது சாத்தியப்படப் போவதில்லை.

உலகில் பல் பண்பாடுகள், பல் மொழிகள், பல் அடையாளங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒட்டுமொத்த எல்லா அடையாளங்களையும் அழித்தொழித்து ஒற்றை அடையாளத்தை மாத்திரமே நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இஸ்லாம் உலக மதம் என்ற கருத்தை நான் கூறவில்லை. மற்றமைகளை அங்கீகரிப்பதையும் ஏற்பதையும் அவற்றுக்கு மத்தியில் ஒரு நடுநிலை சமூகமாக மாறி நீதிக்காக குரல்கொடுப்பதையும் தான் இஸ்லாத்தின் உலகப் பார்வையாக இருக்க முடியும் எனக் கருதுகிறேன். நற்செயல்களில் நட்பணிகளில் மனிதர்களுக்கிடையே போட்டி நடைபெறும். அவ்வளவுதான்
Share this article :

0 கருத்துரைகள்:

அதிகம் பார்வையிட்டது

நபிமொழி அறிவோம்!

“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய நாட்காட்டி


மொத்தப் பார்வையாளர்கள்

 
Support : Creating IPC | Nof | Maruthamunai
Proudly powered by IPC
Copyright © 2011. தௌஹீத் - All Rights Reserved
Template Design by Mohamed Najeeb Published by NOF